Tuesday, November 30, 2010

கொஞ்சம் வலிகளைத் தவிர

கொஞ்சம் பெரியவர்கள்
பூமாதேவிக்காக
கோமணம் கட்டுவார்கள்
கிணற்றால் எங்களை
என்ன செய்துவிட முடியும்
கொஞ்சம் ஞாபகங்களைத் தவிர
மோட்டர் கொட்டாய் சொரவானம் ,
சூறாவாரி சொரவானம் ,
சாமி குதி, குட்டிக் கரணம் ,
காக்கா நீச்சம், படிக்கட்டு நீச்சம் ,
ஓரி, மண்ணெடுப்பு,
புடிக்கிற ஆட்டம்
சுமந்து திரிவதற்கு
கொஞ்சம் வலிகளைத் தவிர

புராண நெய் தடவி

ப்ளாஸ்டிக்கை
சமன் செய்யும் கந்தல்
கழிபட்ட தொலும்பு
வகுபடுதலின்றி
ஒப்பனையற்ற வெறுங் குழவி
மையமிழக்க
விரிந்த உருளை
இருதலைக் கூம்புகள்
மையவிலக்காய்ச் சுழன்றேகும்
மூப்பனின் தத்துவம்
குளக்கரைப் பாறைகள் ,
இருண்ட தெருமுனைகள்
ஓட்டத்தின் பரிச்சயமற்று
இடுதலும் , கட்டுதலும்
ஞாபக மறதியாய்
சண்டைகள் அற்று
திரை ஒளியில் தீபம்
வழிகிறது
புராண நெய் தடவி

Wednesday, August 11, 2010

சுதந்திரத்திற்காய்

பறிக்கப்பட்ட
உன் உரிமைகளெல்லாம்
பறிமுதல் செய்யப்பட்டது
மாட்சிமை தங்கியவர்கள்
பிட்ட உறவுக்கு
வாகாய்க் குனிந்த போது
உன் நிலத்தையும் , என் மகளையும்
அவர்களின் எஜமானர்களுக்கு
கூட்டிக்கொடுத்தால்
தேசபக்தர்களென வரலாற்றில்
பரப்பப் படுவோம்
அனுமதிக்கப் பட்ட பிறகே
எல்லா புணர்தல்களும்
நிகழ்த்தப்பட வேண்டும்
எல்லா குசுக்களின் ஓசையும்
கண்காணிக்கப்படல் வேண்டும்
சட்ட ஆணைகளுக்குட்பட
வேண்டுமென்பதால்
நனவிலிகளின் சிந்தனை
முடிவற்ற காலம் வரை
தொடர்ந்து கண்காணிக்கப்படும்
எல்லா தியாகங்களும்
மக்களால் செய்யப்படும்
மக்களின் சுதந்திரத்திற்காக

Monday, August 2, 2010

அந்த பட்டாம்பூச்சி பயணத்தை முடித்துக்கொண்டது

பூக்கள் முடிவற்றுக்
காத்திருந்த காலமொன்றில்
மிதிவண்டியின் கைப்பிடியிலும்
சீட்டிலும் அமர்ந்து பயணித்தோம்
சில மனிதர்கள் , மரங்கள்
வீடுகள் , வயல்கள்
சாலைகளைத் தாண்டி
ஒரு மதுச் சாலையருகில்
அந்த பட்டாம்பூச்சி
பயணத்தை முடித்துக் கொண்டது

Thursday, July 29, 2010

வெறியாட்டுக்காய்

மௌனத்தின் ஒலியால்
வெளியெங்கும்
நிரப்பப் பட்டிருக்கும்
எலுமிச்சை எழுத்துக்கள்
y ஆல் எரிக்கப்பட்டு
பிரதியெங்கும்
அலைவுறும் கட்டளைகள்
வெறியாட்டுக்காய்

Saturday, July 10, 2010

ஒரே படிக்கட்டில்

நீல நிறத் தென்னைகள்

செழித்திருந்தன

புத்தனும் கண்ணனும்

கிறங்கிக் கிடந்தனர்

கோணல் எழுத்துக்கள்

சுவரெங்கும் துளிர்த்தன

பொங்கல்வரை பூட்டி

வைத்திருக்கலாமெனத்

தோன்றுகிறது

Monday, July 5, 2010

மொழிதல்

வேறுவேறாய் மொழியப்பட்டது
எல்லோரும் ஒன்றையே
பேசியதாய்ச் சொன்னார்கள்
பேச்சின் முடிவில்
வலதிமை
நரம்பு விடைத்தது
ஒரே இரவில்
சாலை எப்படி நீண்டதெனத்
தெரியவில்லை

முதலையின் கண்கள்

எல்லைகள்
தவறித் திரியும்
நிலவின் வஞ்சகம்
நீ
சாக்குகளை அவிழ்த்தபோது
சுருட்டி எறிந்துவிட
இயலுமென்ற போதும்
இழைகளைச் சிதைக்கிறேன்
சிதைவின் வழியிறங்கும்
பசிக்காகவேனும் நீ
வேட்டைக்கு கிளம்பலாம்
ஏங்கிக் காத்திருக்கும்
அந்த
முதலையின் கண்கள்

Thursday, June 10, 2010

கோலைக் கொடுத்த

மலம்

பகுத்தாயப் பட்ட பின்னும்

கண்காணிக்கப்படும் குசுக்கள்

வாழ்க்கை வழிகிறது

பாத்திரமற்று

சூரியகாந்திக்கு மேலும்

வேருக்கு கீழும்

ஐப்பசி மழையில்

கரைந்த சாம்பல்கள்

சாட்சியமாகிப் படியேறிச்

சென்றாலும்

கோலைக் கொடுத்த

தெய்வங்களின் உச்சாடனம்

விதிப்படிஎன்று

அடுத்த கோடைக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை

ஆயத்தமாகும் குடிகாரனைப் போல

ஒவ்வொரு

விடுதி விடுமுறையின்

முந்தைய நாளும்

சென்ற கோடையில்

பெரியவளுக்கு

இரண்டு கரண்டியிழுப்பு

சின்னவளுக்கு ஒரு வடு

முறத்தில் கிழித்தது

கோடைக்குப் பிறகு

இரண்டு முறமும்

நாலைந்து துடைப்பமும்

வாங்கியதாகக் கேள்வி

தீபாவளிக்கு சின்னவள்

வர மறுத்து விட்டால்

அடுத்த கோடைக்கு

என்ன செய்வதெனத் தெரியவில்லை

கேட்கவே கூசுகிறது

எமனைப் புணர்ந்ததாய்ச்
சொல்வது ஈறாக
எல்லா புணர்தல் வசவுகளும்
பழைமையாகிப் போனதால்
வலை குப்பையில்
வசவு தேடினேன்
கி.பி. 2100 வாக்கில்
எல்லா புனர்தல் வசவுகளும்
காலாவதியாகிவிடும் என ஒரு தரவு
தெருச் சண்டைகளில்லாத
புணர்தல் வசவுகள் கேட்காத
தமிழர் ஊர்கள்
கேட்கவே கூசுகிறது

Tuesday, June 8, 2010

I.V. = 99/O.V. x 101/100

காற்றை கிழித் தோடும

அந்த தொடர்வண்டி

பார்வையின் வழி நகரும்

பிளாட்பார சுவர்

காலமும் , இடமும்

பொருளும் , பெயர்வும்

I.V. = 99/O.V. x 101/100

நாளை , மற்றுமொரு நாள்

வித்தியாசம் எனச் சொல்லி

விதிகள் மாற்றப் படலாம்

Monday, May 31, 2010

மயிலிறகு குட்டிகளுக்காய்

புத்தக இடுக்குகள்

கால இடைவெளிகள்

ஓயாத கதையாடல்கள்

மயிலிறகு குட்டிகளுக்காய்