Sunday, August 25, 2019

தர்மசங்கடமான
அந்த மணித்தியாலம்
 சிறு நெருடல் தவிர்த்து மோசமானதாக இருக்கவில்லை
நீ தேவதையாகிப் போனாய்
நான் முட்டாளாகியிருக்க வேண்டும்
ஒரு மலரை உயர்த்தவோ
 தொடர்பை பரிமாறலோ
திராணியற்று பலவீனங்களால் ஆளப்படுபவன் நான்
கோர்வையற்ற உளறல்களுடன்
கோரிக்கை முன்வைப்பு மின்றி
இந்தக் கவிதையின்
 கடைசி வரிகளைப் போல்
முடிவற்றுத் தொடர்கிறேன்
கொம்புகளும் தீ நாக்குகளுமற்ற
 என்னை அசுரன் என்கிறாய்

விரிக்கப்பட்ட எல்லா கம்பளங்களும்
 பறக்கும் என்கிறாய்
உன்னை
 பயணிக்க வற்புறுத்தியதாக
 குற்றம் சாட்டுகிறாய்
ஆகவே
கம்பளம் விரிப்பதென்பது
 தவறென்றாகிறது

வெற்றியும் தோல்வியும்
 நாணய பக்கங்களென
 தர்க்கம் என்னை
 தகவமைத்திருக்கிறது

விசாரணைக்காக காத்திருப்பது
 என் வழக்கமல்ல 
உணரும்போதே சிலுவை சுமக்க
 தயாராக இருக்கிறேன்

ஏன் இப்படி
மோசமாக எழுதுகிறாயென
 கேள்விகள் முன்வைக்கப்படும் 

ஒருபோதும் நான்
 கவிதைகளை எழுதுவதேயில்லை
 கவிதைகள் தான் என்னை
எழுதிச் செல்கின்றன

ரசவாதமும் மாயக்கண்ணாடியும்
மந்திர ஜாலங்களுமற்ற
தட்டையான மனிதன் நான்

இயல்பிலில்லாத வெறுப்பை
என் பொருட்டு சுமக்க வேண்டாமென
 வேண்டுகோள் விடுக்கிறேன் .