Monday, October 3, 2022

வாழ்க்கை நதியில்

நான் தூங்கிவிட்டிருந்த
முன்னிரவின் பின்பகுதியில்
வந்திருந்தது உன் அழைப்பு
அழைப்பின் சொற்கள் இயல்பாகத்தானிருந்தது
ஒரு நொடியும் உறக்கமில்லாத
முந்தைய இரவும் ஏறத்தாழ
பயணத்தில் கழிந்த பகலும்
மகளிர் கல்லூரி உணவு விடுதியின்
சாண்ட்விச்சும், பஞ்சாபி தாபாவின்
சுக்கா ரொட்டியும், சிக்கன் கிரேவியும்
கருந்துளையின் மையமாய்
உறக்கம் என்னை ஈர்த்துக்கொண்டது
சொல்வதற்கு ஒன்றுமில்லை
" இன்னும் சில வாரங்களில்"
என்பதாகத்தான்
வாழ்க்கை நதியில்
நகர்ந்து கொண்டிருக்கிறது.



Sunday, August 25, 2019

தர்மசங்கடமான
அந்த மணித்தியாலம்
 சிறு நெருடல் தவிர்த்து மோசமானதாக இருக்கவில்லை
நீ தேவதையாகிப் போனாய்
நான் முட்டாளாகியிருக்க வேண்டும்
ஒரு மலரை உயர்த்தவோ
 தொடர்பை பரிமாறலோ
திராணியற்று பலவீனங்களால் ஆளப்படுபவன் நான்
கோர்வையற்ற உளறல்களுடன்
கோரிக்கை முன்வைப்பு மின்றி
இந்தக் கவிதையின்
 கடைசி வரிகளைப் போல்
முடிவற்றுத் தொடர்கிறேன்
கொம்புகளும் தீ நாக்குகளுமற்ற
 என்னை அசுரன் என்கிறாய்

விரிக்கப்பட்ட எல்லா கம்பளங்களும்
 பறக்கும் என்கிறாய்
உன்னை
 பயணிக்க வற்புறுத்தியதாக
 குற்றம் சாட்டுகிறாய்
ஆகவே
கம்பளம் விரிப்பதென்பது
 தவறென்றாகிறது

வெற்றியும் தோல்வியும்
 நாணய பக்கங்களென
 தர்க்கம் என்னை
 தகவமைத்திருக்கிறது

விசாரணைக்காக காத்திருப்பது
 என் வழக்கமல்ல 
உணரும்போதே சிலுவை சுமக்க
 தயாராக இருக்கிறேன்

ஏன் இப்படி
மோசமாக எழுதுகிறாயென
 கேள்விகள் முன்வைக்கப்படும் 

ஒருபோதும் நான்
 கவிதைகளை எழுதுவதேயில்லை
 கவிதைகள் தான் என்னை
எழுதிச் செல்கின்றன

ரசவாதமும் மாயக்கண்ணாடியும்
மந்திர ஜாலங்களுமற்ற
தட்டையான மனிதன் நான்

இயல்பிலில்லாத வெறுப்பை
என் பொருட்டு சுமக்க வேண்டாமென
 வேண்டுகோள் விடுக்கிறேன் .

Saturday, June 8, 2019

காதலிப்பதற்கு
முட்டாளாய் இருக்க வேண்டும்
காதலிக்கப்படுவதற்கு
தேவதையாய் இருக்க வேண்டும்
எந்த ஒரு தேவதையும்
கருப்பாக இல்லாதது
மன்னிக்க முடியாத குற்றம்தான்
ஆனாலும் என்ன செய்ய
தேவதையைத்தான்
காதலிக்க வேண்டியுள்ளது

எத்திலி (முதல் தேவதை)
எட்டு வயதில் மரத்துண்டுகளுடன் விளையாடினோம்
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சந்திப்பு
உரையாடலின்றி
ஈன்ற பிறகு
15 ஆண்டுகள் கழித்து ஒரு சந்திப்பபு
பிறகொரு சந்திப்பில்
சகஜமாய் பேசிக்கொண்டோம்

பீர்க்கங்காய் (அசலூர் தேவதை )
15 ஆண்டுகளுக்குப் பிறகும்
அதே ஒடிசலாய்
பூத்தபோதிருந்த
அதே ஒற்றை மூக்குத்தியுடன் மட்டும்
இன்னமும் அழகாய்
ஈன்று விட்டிருக்கக் கூடும்
ஞாபகத்திலிருந்து மீட்டு
பெயரை மாற்றிச் சொன்னாள்

குள்ளத்தாரா ( சொந்த ஊர் தேவதை )
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சடங்கில்
அடையாளம் தெரியவில்லை எனச் சொன்னாள்
வேகமாய்ப் பேசினாலும்
அதே சுயநலம் கண்களில்
ஏதாவது ஒரு சில சடங்குகளில் சந்திப்பதும் உண்டு

இச்சாதாரி (கடைசி தேவதை)
மஞ்சள் முகமும் உச்சி சடையுமாய்
ஒரு முறை என்னைப் பற்றி
இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறாள்
முப்பது ஆண்டுகளாய்க் காத்திருக்கிறேன்
9Dயை நினைவுபடுத்தி சொல்ல
ஒரு சந்திப்பு நிகழுமென 
மருத்துவமனை செல்ல இயலாதவனின்
கடவுள் நம்பிக்கையை போல
இச்சாதாரி ஒருநாள் பிரான்சிஸ்கா ஜான்சன் ஆகக் கூடுமென

அப்புறமென்ன
 நான் புத்திசாலியாகி  விட்டேன்

Wednesday, August 29, 2018

புணர்தல் நிமித்தமான

புணர்தல் நிமித்தமான
எல்லா நிகழ்வுகளின் போதும்
காற்றில் மேலெழும்பும்
ஒற்றைச்சிறகாய்
அந்த சொற்றொடர்
கந்தக நெடியுடன் எப்படித்தான்
புணர்ந்து கொள்கிறார்களோ
கிறிஸ்துவின்
யூதேயர்களைப் பற்றியது அத
மறைவிடச் சிரைப்புகளுக்காய்
கண்ணாடி பரிசு பெற்ற
யூதேய நாவிதர்களுக்கு
ஏதொன்றைப் பற்றியும்
கவலையில்லை

Thursday, November 3, 2016

ஆவணக்களரி

வண்டித்தடம், 
வெள்ளெருக்கு ,
சீமைக்கருவேலன் , 
கொஞ்சம் பெருமணல் , 
கூழாங்  கற்களுடனும் 
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி .

Sunday, October 30, 2016

வண்டித்தடம், 
வெள்ளெருக்கு ,
சீமைக்கருவேலன் , 
கொஞ்சம் பெருமணல் , 
கூழாங்  கற்களுடனும் 
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி .